அட…நம்ம திருச்சி தெப்பக்குளமா இது?- இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்!!
திருச்சியின் அடையாளமாக விளங்குவது, மலைக்கோட்டை. மலைக்கோட்டையின் மேல் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது மற்றொரு விசேஷம். ஆனால், இந்த தெப்பக்குளத்தை சுற்றி நான்கு புறமும் ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. மலைக்கோட்டை பகுதியில் பிரபலமான ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், செல்போன் விற்பனையகம், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் புத்தாண்டு,
ரம்ஜான் போன்ற விசேஷ நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தை எட்டிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கரைக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. ஆகவே, அந்த கடைகளை அகற்றிவிட்டு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்த பிரமுகர்களும், திருச்சி வாழ் மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்தது. சமூக ஆர்வலர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்று
இடம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தரைக் கடைகள் இன்று(14-11-2025) அகற்றப்பட்டன. இதனால், தெப்பக்குளம் விசாலமாக காட்சி அளிக்கிறது. கடைகள் அகற்றப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பார்வையிட்டார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட தரைக்கடை வியாபாரிகளுக்கு மதுரைரோடு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தரைக்கடைகள் அகற்றப்பட்ட பிறகு தெப்பக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விசாலமாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தற்போது தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தெப்பக்குளமும், அதனை ஒட்டி உள்ள சாலையும் விசாலமாக உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு தெப்பக்குளத்தை இப்படி பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

Comments are closed.