ஒரு மனிதரை இப்படி கூட தாக்குவார்களா?- திருபுவனம் அஜித் குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி…ரிப்போர்ட் முழு விவரம்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27). நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கொடுங்காயங்கள்:
இந்தநிலையில் தற்போது அஜித்குமாரின்பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. சுமார் 50 வெளிப்புற காயங்கள் இது மிக அதிகமான உடற்காயங்களை குறிக்கிறது. இந்த அளவிலான காயங்கள் ஒரே நேரத்தில் அல்லது தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். பொதுவாக, காவல் சித்ரவதை அல்லது சட்டவிரோத விசாரணைகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காயங்கள் ஏற்படுவது அதீதமான வன்முறையை காட்டுகிறது.
2. உடலில் 12 சிராய்ப்பு காயங்கள் இருந்தன. சிராய்ப்பு காயம் என்பது தோலில் சுரண்டல், உராய்வு அல்லது தடிமனாக்கம் போன்ற காயங்கள். இது நகத்தால் கீறுதல், தரையில் இழுத்தல், அல்லது கடினமான பொருளால் தாக்குதல் என்பவற்றால் ஏற்படலாம்.சிராய்ப்பு காயங்கள் பல இடங்களில் இருப்பது, உடலை தரையில் இழுத்தல் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைக்க போராடியதைக் காட்டுகிறது.
3. மீதி அனைத்தும் ரத்த கட்டு எனும் கன்றிய காயங்கள். ரத்தக்கட்டு என்பது உடலில் உள்ள சதையை கடுமையாக அடித்ததனால் ஏற்படும் நீல/கருப்பு நிறமான காயம். இது தாக்குதலின் இடத்தில் நரம்பு நசைப்பு, சதை அடிதடி போன்ற தாக்கங்களை விளக்குகிறது.
4. கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் வெறும் ஒற்றை காயங்கள் அல்ல.அதாவது ஒரு காயமாக பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் உள்பகுதிகளில் காயங்கள் உள்ளன.இந்த வகையான காயங்கள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்றதை காட்டுகிறது. இது சித்திரவதையின் திட்டமிட்ட தன்மையையும் காட்டுகிறது.
5. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளன. இந்த கோணங்கள், தாக்கங்கள் பல்வேறு விதங்களில், பல்வேறு பொருட்களால் இரும்பு, பிளாஸ்டிக், பைப், ரப்பர் போன்ற ஆயுதங்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இது ஒருவரை கட்டி வைத்து, பலபேர் பல இடங்களில் தாக்கியிருப்பதற்கான சாத்தியத்தையும் தருகிறது.
6. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் உள்ளது.இது மிகவும் ஆபத்தான காயம். வாயிற்குள் அல்லது குடல் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய காயம் உயிருக்கு ஆபத்து தரக்கூடியதாக இருக்கலாம்.
7. தலை கபாலத்தில் அடியும், உள்ளே மூளையில் ரத்த கசிவும் உள்ளது. இது தலையில் ஏற்பட்ட படுகாயம். கபால எலும்பில் அடிபட்டால், அது மூளை பாதிப்பிற்கும் வழிவகுக்கலாம். இது பிரேத பரிசோதனைக்கு மிக முக்கியமான விஷயம். மரணம் நேர்ந்ததற்கான நேரடி காரணமாக இது இருக்க வாய்ப்பு அதிகம்.
8. சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளது. இது மிக தீவிரமான சித்ரவதை முறைகளில் ஒன்று. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயல். சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. இந்த சித்ரவதை திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக்கூடியது.உடல் முழுவதும் தாக்கங்கள் இருப்பதால், தனிநபரால் மட்டும் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. இது தீவிர காவல் சித்ரவதை, மற்றும் சட்டவிரோத விசாரணை, அல்லது படுகொலை எனக் உறுதி படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.