Rock Fort Times
Online News

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு திடீர் “ஹார்ட் அட்டாக்”…- காப்பாற்ற முயன்ற போராட்டம் வீணானது…!

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம்( ஏப்ரல் 15) தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி கோமதி என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நேற்று இரவு திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி ரயில் மூலம் திண்டுக்கலுக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோமதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவருடன் வந்த உறவினர் தண்ணீர் கொடுத்து அமர வைத்துள்ளார். அந்த ரயில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அங்கு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ரயில், மணப்பாறையை அடைந்ததும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் விரைந்து வந்து கோமதியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. பின்னர் அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்