மும்பை-ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் பயணித்த ஒரு பெண், இருக்கையில் அமர்ந்தபடியே செல்போன் சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படும் ப்ளக் பாயிண்டில் எலெக்ட்ரிக் கெட்டிலைச் செருகி நூடுல்ஸ் சமைத்துள்ளார். இதனைப் பார்த்து பதறிய பயணிகளிடம், “இதே கெட்டிலில் ஏற்கெனவே 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்து இருக்கிறேன்” என்று அந்தப் பெண் கூலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. ஓடும் ரயிலில் பெண் சமையல் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பொதுமக்கள் “ரயிலில் சமைக்கும் போது தீப்பிடித்தால் என்ன ஆகும்?”, “பொது இடத்தில் இப்படித்தான் அறிவு இல்லாமல் நடந்துகொள்வதா?” என்று ஆத்திரத்துடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, இந்திய ரயில்வே இச்சம்பவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ரயில்வே விதிப்படி, எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற உயர் மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தீவிபத்து, மின்சாரக் கோளாறு உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.