அரியலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக அரியலூர் புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி தொடர்பாக பேச எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். நாங்கள் உருவாக்கிய கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். அதை மேலும் வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கிறது. இந்த கூட்டணிகளை விட்டு விட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்கிற தேவை இல்லை. வேண்டுமென்றே வி.சி.க மீது சந்தேகத்தை எழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதை முற்றிலுமாக மறுக்கிறேன். வி.சி.க வில் எந்த ஊசலாட்டமும் இல்லை. யாரோ சிலர் போகிற போக்கில் ஏதோ பேசிவிட்டு வி.சி.க மீது சந்தேகத்தை எழுப்ப முயற்சிக்கிறார்கள் அதை நான் நூறு சதவீதம் மறுக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தான் வி.சி.க இடம்பெறும்.
அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்பது குறித்து ஓராண்டுக்கு முன்பு இசைவு தெரிவித்திருந்தேன். அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி நிகழ்ச்சி நடந்திருந்தால் அதில் தமிழக முதலமைச்சர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறியிருந்தார்கள். தற்போது டிசம்பர் மாதம் அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக கூறுகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களோடு ஆலோசித்து முடிவெடுப்பேன் என்று கூறினார். பேட்டியின்போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைவேந்தன், குருஅன்புசெல்வம், அரியலூர் மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, நிர்வாகிகள் கதிர்வளவன், சேவை.மாறன், ஏ.எஸ்.ஆர்.மதி, மாநில நிர்வாகி ஆசிரியர் செல்வராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Comments are closed.