Rock Fort Times
Online News

திருச்சியில் கன்னியர் சபைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பா?- தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்த சென்ற போலீசார் விடிய விடிய காத்திருப்பு…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் ஒன்றியம், கந்தநல்லூரில் புனித அடைக்கல மாதா  கன்னியர் சபை செயல்பட்டு வருகிறது.  இந்த சபைக்கு அதே பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் உள்ளது.  இந்நிலையில் திருச்சி  அரியமங்கலம்,  லஷ்மி நகரைச் சேர்ந்த  ரியல் எஸ்டேட் அதிபர் மோகன் பட்டேல், அவரது உறவினர்களான மகேந்திரன் மற்றும் சங்கீதா ஆகியோருடன் சேர்ந்து போலி பட்டா மூலம் அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கன்னியர் சபை சார்பில் கந்தநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து என்பவர்  திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல்  பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மோகன்பட்டேல், மகேந்திரன், சங்கீதா ஆகிய மூவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 418, 420, 467, 468 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் புனித அடைக்கல மாதா கன்னியர் சபை நிர்வாகி பவுலின்மேரி, திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியை நேரில் சந்தித்து தங்களுக்கு சொந்தமான இடத்தை போலிபட்டா மூலம் அபகரித்துக் கொண்ட மோகன் பட்டேல் மற்றும் அவரது சகாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கூறி மனு அளித்தார்.

இதுதொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்த மாரிமுத்து மற்றும் கன்னியர் சபை நிர்வாகி பவுலின் மேரி ஆகியோரை மோகன் பட்டேல் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மோகன் பட்டேல் மீது BNS 296 (B) மற்றும் 351 (3) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் தனிப்படையினர் சப்- இன்ஸ்பெக்டர் ரெஜி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண் காவலர்களுடன் லட்சுமிபுரத்தில் உள்ள மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த சென்றனர். அப்போது மோகன் பட்டேல் நண்பரும், ரியல் எஸ்டேட் புரோக்கருமான ரவி என்பவர், போலீசாரிடம் சுமார் இரண்டு மணி நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மோகன் பட்டேல் குடும்பத்தினர் வீட்டை உள்புறமாக தாழிட்டு கொண்டனர். இதனால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் விடிய, விடிய காத்திருந்தனர். தற்போது வரை அங்கு போலீசார் காத்திருக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்