Rock Fort Times
Online News

தமிழிசை சௌந்தர் ராஜனை எதிர்த்து பிரேமலதா விஜயகாந்த் போட்டி?* திமுக ‘மாஸ்டர் பிளான்’…!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. திமுக கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் புது வரவாக தேமுதிக இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்க உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பட்டியலிட்டு தே.மு.தி.க., தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளதாகவும் அதில் இருந்து 7 தொகுதிகளை தி.மு.க. வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. தலைமையிடம் தே.மு.தி.க. கொடுத்த 20 தொகுதிகள் பட்டியலில், கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி) விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் களம் இறங்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம். ஆனால், தி.மு.க. தலைமையோ, பிரேமலதா விஜயகாந்தை சென்னையில் களம் இறங்குமாறு கூறுகிறதாம். குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட சொல்கிறதாம். காரணம், அந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதாம். அதனால், அவரை எதிர்க்க இவர்தான் சரியான ஆளாக இருப்பார் என்று தி.மு.க. தலைமை கருதுகிறதாம். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் பிரேமலதா விஜயகாந்தை தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்