Rock Fort Times
Online News

அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?* ஈஷா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி-பிரேமலதா சந்திப்பு !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இரட்டை இலக்க தொகுதிகள், ராஜ்யசபா சீட் என டிமாண்ட் செய்து வருவதால் திமுக, அதிமுக கட்சிகள் யோசித்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று( பிப்.15) நடைபெற்ற சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர். முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது அ.தி.மு.க.- பா.ஜ.க.- தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்