வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி:* எக்ஸெல் குழுமங்களின் சேர்மன் எம்.முருகானந்தம் தகவல்!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று எக்ஸெல் குழுமங்களின் சேர்மன் எம்.முருகானந்தம் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் அருகே கணேசபுரம் பகுதியில் எக்ஸெல் குழுமம் அமைந்துள்ளது. இதன் கீழ் சுமார் 12க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு அளவில் இயங்கி வருகிறது. இதன் சேர்மனாக இருப்பவர் பொறியாளர் எம்.முருகானந்தம். அதோடு ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு இயக்குனராகவும், திருச்சி ட்ரேட் சென்டர் சேர்மன் ஆகவும் இருந்து வருகிறார். கடந்த காலத்தில் இவர் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கணிசமான அளவில் வாக்குகளை பெற்றார். பின்னர் கமல்ஹாசன் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.முருகானந்தம், நான் அரசு பள்ளியில் பயின்றுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு மனிதனுக்கு இரண்டு விசயம் தேவைப்படுகின்றது. ஒன்று ஆசைப்படுதல், மற்றொன்று அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்குதா என்பதுதான். வாழ்க்கையை இரண்டு பாதியாக பிரிக்கலாம், ஒன்று பாராட்டு பெருவது, மற்றொன்று பாராட்டை இழப்பது. வாழ்க்கையை இரண்டாக பிரித்தால் ரொம்ப மகிழ்ச்சியா போகும். திருச்சி என்பது மிகப்பெரிய பவர் சிட்டி, கல்வியில் சிறந்த மாநகரம். இங்கு அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த நேரம் தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை மாற்றியிருக்கனும், அது ஏன் இன்னும் மாறல, மாத்த முடியலன்றது தெரியல. அதை கேக்கவும் இங்க யாரும் இல்ல, திருச்சியில் இருந்து எங்கப்போனாலும் 300 கிலோ மீட்டர்ல பிற மாநிலங்களையும், பிற வர்த்தக நகரங்களையும், கப்பல் துறைமுகங்களையும் சென்றடைய முடியும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி இருக்கின்றது. அதனாலதான் சொல்றேன், திருச்சியை நம் மாநிலத்தில் தலைநகரமாக்க வேண்டும் என்று. இந்திய அளவில் டாப் மூன்று இடங்களில் 3-வது இடமாக திருச்சி இருக்கின்றது. திருச்சியிலிருந்து சரியான லீடர்கள் உருவாகல, அதனாலதான் இன்னைக்கு நாம் தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை உருவாக்க தவறிவிட்டோம். வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எனது மண், என்னோட ஊர் என்பதால் நான் மீண்டும் திருவெறும்பூரில் போட்டியிட உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். யாருடன் இணைந்து களத்தில் இறங்கப் போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
Comments are closed.