Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் “கல்லா” கட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த அம்மனை தரிசித்து செல்கின்றனர். அந்தவகையில் இன்று(05-01-2025) அதிகாலை அம்மனை தரிசனம் செய்வதற்கு ஆந்திராவில் இருந்து 30 பக்தர்கள் வருகை தந்தனர்.  அவர்கள் வரிசையில் நின்ற போது பக்தர்களிடம் கோயில் காவலாளி பேரம் பேசி 30 நபர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அப்போது அங்குள்ள கோவில் அதிகாரி ஸ்டாலின்குமார் கொடிமரத்திடம் நின்ற கூட்டத்தை பார்த்து அவர்களிடம் இவ்வழியாக வரக்கூடாது, கட்டண வரிசையில் அல்லது இலவச வரிசையில் வர வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு ஆந்திராவைச் சேர்ந்த பக்தர், நான் 30 நபர்களுக்கு கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணம் செலுத்தி உள்ளேன், அவர்தான் எங்களை இந்த வழியாக போகச் சொன்னார் என்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரி ஸ்டாலின் குமார், விசாரணை செய்ததில் கோவிலில் தரிசன கட்டணம் 100 ரூபாய் கட்டணம் செலுத்தும் இடத்தில் பணிபுரியும் சுதாகர் மற்றும் ஈஸ்வரன் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகரின் தம்பி ஸ்ரீதர், பெண் காவலாளி சைலஜா உள்ளிட்ட நான்கு நபர்களும் பணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்திடம் அந்த பக்தர் புகார் அளித்துள்ளார். கோவில் இணை ஆணையர் பிரகாஷ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் இவ்வாறு செயல்படும் கோவில் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்