திருச்சி, வயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தரை தரக்குறைவாக பேசிய ஜீயபுரம் டி எஸ்.பி. மீது நடவடிக்கை பாயுமா? * பக்தர்கள் எதிர்பார்ப்பு ( வீடியோ இணைப்பு )
திருச்சியை அடுத்துள்ள வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தென் தமிழகத்தில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இது விளங்கி வருகின்றது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி,பங்குனி உத்திரமான நேற்று (ஏப்ரல் 11) குமார வயலூர் முருகனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி, வரிசையில் வராத பக்தர் ஒருவரை தரக்குறைவாக பேசினார். அதற்கு அந்த பக்தர் ஏதோ சொல்ல ஏய் போடா டேய்… நாயே…என்று மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அவரை, அங்கிருந்து விரட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஒரு பெண்ணை அந்த காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுமதி என்பவர் தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை பார்த்து டென்ஷனான திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அந்த பெண்ணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதுடன் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களிடம் இப்படியா நடந்து கொள்வது உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? , இதுதான் நீங்கள் புகார் தாரர்களிடம் நடந்து கொள்ளும் லட்சணமா…என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அதேபோல பக்தர் ஒருவரிடம் அதுவும் கோவில் என்றும் பாராமல் ஜீயபுரம் டிஎஸ்பி பழனி, வசை பாடியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தனது லிமிட்டிலுள்ள போலீசாரையும் அந்த டிஎஸ்பி இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவார் என்றும், அவரின் கீழ் பணியாற்ற தங்களுக்கு விருப்பமில்லை என்றும், தங்களுக்கு டிரான்ஸ்பர் வேண்டும் என்றும் சில போலீசார் மேலிடத்தில் கேட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.