Rock Fort Times
Online News

மீன் வியாபாரியை திருச்சியில் வைத்து தீர்த்து கட்டியது ஏன்?- கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்…

பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராமராஜ் (வயது 26). மீன் வியாபாரியான இவர்,  திருச்சி உறையூர் குழுமணி சாலையில் அமைந்துள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன்களை மொத்தமாக வாங்கி பெரம்பலூரில் சில்லரை விற்பனை செய்வது வழக்கம். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 29.10.2023 ) அதிகாலை அவர், மீன் கொள்முதல் செய்வதற்காக தனது நண்பர்களுடன் காரில் திருச்சி வந்தார் . மீன் மார்க்கெட் முன்பு காரை நிறுத்தி இறங்கி மார்க்கெட்டிற்குள் நுழைய முயன்றபோது, அங்கு 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மக்கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ராமராஜை சரமாரியாக வெட்டினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இருந்தாலும் ஓட ஓட விரட்டி ராமராஜை வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த கொலை குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெரம்பலூரில் கடந்த 2021வது ஆண்டு மார்ச் 25ம் தேதி செங்குட்டுவன் என்பவரை ராமராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த வழக்கு பதிவாகி விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், ராமராஜ் மற்றும் அவரது சகாக்கள் மீது பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது. ராமராஜ் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் ரௌடி பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் செங்குட்டுவன் கொலைக்கு பழிக்குப் பழியாக ராமராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஐபிஎஸ்  உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ்(34), விஜயராஜ்(33), ராஜு என்கிற டால்டா கண்ணன்(33) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு பட்டா கத்தி, ஒரு சூரி கத்தி, ஒரு வீச்சரிவாள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதில் பிரகாஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
கொலை செய்யப்பட்ட ராமராஜ்க்கு சிவா என்கிற அண்ணனும் , அய்யனார் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் அய்யனார் ஆரம்பத்தில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். பின்னர் பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி செங்குட்டு வேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். கஞ்சா வாங்கி விற்பதில் அய்யனாருக்கும் ,செங்குட்டு வேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் தனது சகோதரா்கள் சிவா, ராமராஜ் , மைத்துனர்கள் சண்முகம் மற்றும் அறிவழகன் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் வைத்து செங்குட்டு வேலை வெட்டி கொலை செய்தனர். செங்குட்டு வேல் எனது நெருங்கிய நண்பராவார். எங்கு சென்றாலும் நாங்கள் 2 பேரும் சேர்ந்து தான் செல்வோம். இந்த நிலையில் செங்குட்டு வேலை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால் ராமராஜ் உள்ளிட்ட சகோதரர்கள் மூன்று பேரும் எப்போதும் சொந்த ஊரில் ஆள் பலத்துடன் இருப்பதால் அவர்களை எதுவும் செய்ய இயலவில்லை. அதைத் தொடர்ந்து வெளியூரில் வைத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். இதற்கிடையே பெரம்பலூரில் ரோகித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அய்யனாரை பெரம்பலூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் சகோதரர்கள் சிவா, ராமராஜ் ஆகிய இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர். வழக்கமாக திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதை அறிந்த நாங்கள் சில தினங்கள் இங்கு வந்து நோட்டமிட்டோம்.
பின்னர் இதுவே அவர்களை தீர்த்துக்கட்ட சரியான இடம் என்பதை முடிவு செய்து நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து நண்பர்கள் விஜயராஜ், ராஜு, உள்பட 5 பேர் மோட்டார் சைக்கிள்களில் அவர்களை பின்தொடர்ந்து திருச்சிக்கு வந்தோம். பின்னர் திட்டமிட்டபடி மார்க்கெட்டில் மீன் வாங்கிக் கொண்டு காரில் ஏற வந்தபோது ராமராஜை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தோம். அவரது அண்ணன் சிவா காருக்குள் இருந்ததால் தப்பித்துக் கொண்டார். இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக போலீசாா் தொிவித்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்