Rock Fort Times
Online News

மாமல்லபுரம் அருகே பிரபல ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? -பரபரப்பு தகவல்கள்…!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (45). கடந்த 2005-ம் ஆண்டு ரவுடி டெலிபோன் ரவி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழ்நாடு முழுவதும் 6 கொலை வழக்குகள் என மொத்தம் 32 வழக்குகள் இவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. கூலிப்படை தலைவனாகவும் இருந்துள்ளார். குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் இவர் ஆஜராகும்போது, 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வருவது வழக்கமாம். மேலும், கடந்த 2010-ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் எனவும் கூறப்படுகிறது. அரசியல் பின்னணி வேண்டும் என்பதற்காக இவர் கடந்த 2021-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ்ஸிஸ் சுதாகர், பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதில், சென்னை புறநகர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட ரவுடிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில், ஏ ப்ளஸ் ரவுடிகளுக்கும், சிறிய ரவுடிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இருந்தால், அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் தனிப்படை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அருகே போலீஸார் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக ஒரு காரில் சீர்காழி சத்யா தனது கூட்டாளிகளுடன் பயணம் செய்தது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் காத்திருந்து அவரை பின்தொடர்ந்தனர்.
தன்னை போலீஸார் பின் தொடர்வதை அறிந்த சத்யா, பழவேலி மலைப் பகுதியை நோக்கி காரில் தப்பிச் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் காட்டுப் பகுதியில் வைத்து அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாரை தாக்கிவிட்டு சத்யா தப்பிச் சென்றபோது, போலீஸார் சத்யாவை நோக்கி சுட்டதில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை, போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதான், துப்பாக்கி சூடுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்யா குணமடைந்ததும் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்