Rock Fort Times
Online News

திருச்சியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலியை கர்ப்பமாக்கிய காதலனை கைது செய்வதில் தயக்கம் ஏன்?-அரசியல் தலையீடு காரணமா? (வீடியோ இணைப்பு)

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்  இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும், திருச்சி ஜங்ஷன் பகுதியில் தனியார் கார் கம்பெனியில் பணி புரிந்து வரும்  திருச்சி பால்பண்ணை விசுவாஸ் நகர் பகுதியை சேர்ந்த
ஸ்ரீபொன்னையன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம்  நாளடைவில் காதலாக மலர்ந்தது.  பின்னர் அவர்கள் நேரில் சந்தித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது ஸ்ரீ பொன்னையன் அந்த இளம் பெண்ணிடம்,  தனது சொந்த மாமா அதிமுக முக்கிய பிரமுகர் என்றும்,
திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்றும்,  இதனால் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், தானும் அரசியலில் இருப்பதாகவும், அதற்கு ஆதாரமாக அரசியல் முக்கிய புள்ளி பலரிடம் எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டி  உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.  இதனை தனது காதலனிடம் தெரிவித்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் தற்போது குழந்தை வேண்டாம் கர்ப்பமாக இருப்பது வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். கர்ப்பத்தை கலைத்து  விட்டால்  திருமணம் குறித்து வீட்டில் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.  இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண்  தனது கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

அதன்பிறகு அந்த பெண்ணுடன் பேசுவதை  ஸ்ரீ பொன்னையன் நிறுத்திக் கொண்டார்.  அந்தப் பெண் பலமுறை தொடர்பு கொண்டும் காதலன் போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த  அந்தப் பெண்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போதும் காதலன் திருமணம்  செய்து கொள்ள முன்வரவில்லை.  இதனால், தான்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண்,  கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தபால் மூலம் கோட்டை காவல்  நிலையத்திற்கும், மாநகர போலீஸாருக்கும் புகார் மனு அனுப்பினார். அந்த புகார்  மனுவின் அடிப்படையில் அந்த  இளம்பெண்ணை கோட்டை போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.  ஆனால், எதிர் தரப்பில் ஸ்ரீ பொன்னையன் தரப்பு சார்பில் வழக்கறிஞர்கள் இருவர் வந்து எல்லாவற்றையும் பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.  அப்போது கோட்டை போலீசார் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு  செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.  இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் கே.கே நகர் காவலர் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது  அந்தப் பெண்  மாநகர கமிஷனர் காமினி  ஐபிஎஸ்ஐ சந்தித்து  இதுதொடர்பாக  புகார் மனு அளித்தார்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.  அதன்பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதியிடம், அந்தப் பெண் புகார் அளித்தார்.  அப்போது காவல் ஆய்வாளர் சரஸ்வதி, அந்த இளம் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ஸ்ரீ பொன்னையனுக்கு  ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு வழியாக  காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் ஸ்ரீ பொன்னையன் மீது வழக்குப் பதிவு  செய்தார். ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பிறகும் இன்னும் ஸ்ரீ பொன்னையன் கைது செய்யப்படவில்லை. அரசியல் தலையீடு காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால், கடந்த  18 நாட்களுக்கு மேலாக அந்தப் பெண் தனக்கு நீதி வேண்டும், தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என  ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கும்  அலைந்து திரிந்து வருகிறார்.  அரசியல்  தலையீடு  காரணமாகத்தான் ஸ்ரீ பொன்னையன் இன்னும் கைது செய்யப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.அவருக்கு  நீதி கிடைக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்