Rock Fort Times
Online News

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்  திட்டத்திற்கு ‘நோ’ சொன்னது ஏன்?* மத்திய அமைச்சர் விளக்கம்…! 

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது போல கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. மண் பரிசோதனைகள், ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள இடங்கள், வழித்தடம் என ஆய்விற்கு பிறகு மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை மனு தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டது.  இந்தநிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி  தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து  வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை விட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என தமிழக அரசின் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை, மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை,  கோவையில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  அடுத்ததாக மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும் போது மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை. கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை, சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடியை ஒதுக்கியுள்ளதை மு.க.ஸ்டாலின் மறைத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் இதுவரை யாருக்கும் வழங்காத வகையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மெட்ரோ ரயில் விண்ணப்பத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்கி சர்ச்சையாக்கியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்