ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கப் போவதில்லை என இயக்குநர் சுந்தர். சி திடீரென அறிவித்திருப்பது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தில், இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த செய்தியை ரசிகர்களுடன் பகிர்கிறேன். தவிர்க்க முடியாத காரணத்தினால், ’தலைவர் 173’ படத்தில் இருந்து விலகுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ’தலைவர் 173’ படத்தை நான் இயக்குவது என்பது எனக்கு கனவாக அமைந்தது. வாழ்க்கையில் ஒரு சில சமயங்களில் நமக்கு போடப்பட்ட பாதையில் பயணிக்க வேண்டும். அது நமது கனவுகளை பின்பற்ற முடியாத நிலையாக கூட இருக்கலாம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் கடந்த சில நாட்களாக அவர்களுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் விலை மதிப்பில்லாதவை. நான் இந்த படத்தில் இருந்து விலகினாலும், அவர்களது அறிவுரைகள் எனக்கு வழிகாட்டியாக இருக்கும். நான் ’தலைவர் 173’ படத்தில், இருந்து விலகியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய ஆதரவிற்கும், புரிதலுக்கும் எனது மனமார்ந்த நன்றி. விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்” என கூறியுள்ளார். எவரும் எதிர்பாராத வகையில், சுந்தர்.சி ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.