பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 5ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று( அக்.16) அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சியினரும் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அன்புமணி எனக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதற்கு யாரோ காரணம் என வீண் பேச்சு பேசுகிறார். அது போல் மாடு மேய்க்கும் சிறுவன் கூட பேச மாட்டான். நான் முன்பே நிர்வாக குழுவில் கூறினேன், அன்புமணிக்கு தலைமை பண்பு சிறிதளவும் இல்லை. தலைமைப் பண்புக்கு தகுதியற்றவர் அன்புமணி ” என்று. அவர் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ள வேண்டும். அதுதான் அன்புமணிக்கும் நல்லது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் யாரும் அன்புமணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். டிசம்பர் 30ம் தேதி என்னுடைய தலைமையின் கீழ் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்த முக்கிய முடிவு அந்த கூட்டத்தில் எடுக்கப்படும். அன்றைய தினம் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
Comments are closed.