நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக அரசியல் பணிகளில் விஜயும், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும்நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் அளிக்கக்கோரி விஜய் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசில், கால்பந்து, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருந்தது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்ததால் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் ஒதுக்கீடு 2026 தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளருக்கு வழங்கப்படும். முதல் தேர்தலிலேயே பொது சின்னத்துடன் விஜய்யின் தவெக களமிறங்குகிறது. விஜய் கேட்ட சின்னம் கிடைத்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Comments are closed.