தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு சென்ற வாலிபரின் கதி என்ன?- கண்டுபிடித்து தரக்கோரி தந்தை உருக்கமான பதிவு…(வீடியோ இணைப்பு)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு மேகநாதன் (32) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அப்பா- மகன் இருவரும் கரையங்காடு பகுதியில் வசித்து வருகின்றனர். மேகநாதன் டிவி மெக்கானிக் ஆவார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான மேகநாதன், விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டிற்காக முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பேருந்தில் மேகநாதன் மற்றும் 34 பேர் சென்றுள்ளனர். மாநாடு முடிந்து 33 பேர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த புஷ்பநாதன் மகனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன மேகநாதனை தேடி வருகின்றனர். ஆனால், மாநாடு முடிந்து 15 நாட்கள் ஆகியும் மேக நாதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்?, அவரது கதி என்ன ? என்று இன்று வரை தெரியவில்லை. இதுகுறித்து புஷ்பநாதன் கூறுகையில், “விஜய் நடத்திய மாநாட்டிற்கு ஆர்வமாக சென்ற எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு எனது மகனை மீட்டு தர வேண்டும்” என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
Comments are closed.