அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதையடுத்து, செங்கோட்டையன் நேற்று(செப்.8) டெல்லி சென்றார். கோவிலுக்கு செல்வதாகவும், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன், அங்கு பாரதிய ஜனதா தலைவர்கள் யாரையும் சந்திக்க போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்நிலையில் அவர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று(செப்.9) தமிழகம் திரும்பினார். விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்றைய தினம் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். டில்லி சென்றவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அரசியல் சூழல் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கட்சி வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஆகவே கருத்துகள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்று நடக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்ப தங்களின் விருப்பங்களை தெரிவிக்கும் நோக்கத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜனநாயக உரிமை அடிப்படையில் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது. அமித்ஷாவை சந்திக்கும்போது ரயில்வே அமைச்சர் வந்தார். அவரிடம், ‘ ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்கூட்டியே செல்வதால் மாணவர்கள், வியாபாரிகள் செல்வது கடினமாக உள்ளது. அதிகாலை 3 மணிக்கு சென்னை சென்றடைகிறது. அதனை மாற்றினால் உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அதனை குறிப்பிட்டு தாருங்கள் பரிசீலனை செய்வதாக கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.