திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க “வீக் எண்டு ஆபரேஷன்”- * இரவு நேரத்தில் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் திடீர் விசிட்…!
இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நேற்று ( ஆகஸ்ட் 15) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும், சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்த விடுமுறை நாட்களில் திருச்சி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு “வீக் எண்டு ஆபரேஷன்” (Weekend Operation) என்ற பெயரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகளை தீவிர படுத்த உத்தரவிட்டார். எஸ்பி உத்தரவின் பேரில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு நேரங்களில் தேவை இன்றி சுற்றியவர்களை பிடித்து இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள் என்று கேட்டதோடு சந்தேகப்படும் நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், எஸ்.பி. செல்வ நாகரத்தினம் நேற்று இரவு திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை சமுத்திரம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஐ.இ.டி. கல்லூரி சோதனைச் சாவடி மற்றும் சமத்துவபுரம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டோல் பிளாசா ஆகிய பகுதிகளில் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் இருசக்கர ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து, ஏதேனும் முன் வழக்கு உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அறிவுரைகள் கூறினார். இந்த “வீக் எண்டு ஆபரேஷன்” மூலம் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறையும் என்று போலீஸ் அதிகாரிகள் வெகுவாக நம்புகின்றனர்.
Comments are closed.