Rock Fort Times
Online News

எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்…- த.வெ.க. திட்டவட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழகத்தின் முதன்மை சக்தியான த.வெ.க. தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும், ஆளும் கட்சிகளுக்கும் விஜய்யின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது. தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்-அமைச்சர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம். மாற்றிப் பேசுவதும், ஏற்றிப் பேசுவதும் வேண்டாம் என்றால் ஆள் வைத்து தூற்றிப் பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர்! தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை! இதுதான் உண்மை வரலாறு! சரித்திர சிறப்பு பெறப்போகும் மாநாடு முடித்து, தலைவர் விஜய்யின் வெற்றிப் பயணம் முடித்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் செய்து, நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்மசக்திகளை அரவணைப்போம். மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம்! பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம்! ஊடகக் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்