சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போத்தீஸ் ஜவுளி கடைகள் அமைந்துள்ளன. இந்த ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளரின் வீடுகளில் ஒரே நேரத்தில் இன்று (செப்.12) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திருச்சியில் தெப்பக்குளம் பகுதியில் இயங்கி வரும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் மற்றும் என்எஸ்பி சாலையில் அமைந்துள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைக்கடையில் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் நிதி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள், விற்பனை பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சோதனையின் போது நிறுவன ஊழியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போத்தீஸ் நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை திருச்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Comments are closed.