Rock Fort Times
Online News

வி.சி.க. தொண்டர்களால் வழக்கறிஞர் தாக்கப்பட்டாரா?- திருமாவளவன் விளக்கம்…!

டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நேற்று( அக்.7) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழக்கறிஞர் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது திருமாவளவன் வந்த கார் திடீரென உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வழக்கறிஞர் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வழக்கறிஞரான ராஜீவ்காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வி.சி.க.தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் என்னை பார்த்துக் கொண்டே சென்ற இளைஞர், திடீரென பைக்கை நிறுத்தி, கத்திக் கொண்டே காரை நோக்கி வந்தார். காரை மேற்கொண்டு செலுத்த இயலாமல் தடுத்த இளைஞர், வண்டியில் நான் இருக்கிறேன் என தெரிந்தும், வம்புக்கு இழுத்தார். கட்சியை சார்ந்தோர், அவரை தள்ளிப்போகச் சொல்ல, அவர்களை வம்பிழுத்து பேசினார். விசிக-வினரில் ஓரிருவர், அவர் மீது கையால் ஓங்கி அடிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் தடுத்து அவரை தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். என் வாகனம் மீது அவரது வாகனமோ, அவரது வாகனம் மீது என் வாகனமோ மோதவில்லை. இதுதான் நடந்தது. ஆனால், அண்ணாமலை போன்றோர் வக்காலத்து வாங்கி கொண்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை தாக்க முயன்ற விவகாரம் தொடர்பாக, மாவட்டந்தோறும் வி.சி.க.ஆர்ப்பாட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்