கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு போகணுமா?* கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் – ரெயில்கள் ‘ரெடி’…!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும். வழக்கம்போல இந்த ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி புதன்கிழமை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் கூறியதாவது:-
தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை பொருத்து 40 பஸ்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக 24 தற்காலிக பஸ் நிலையங்களும், 130 கார் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும். கார்த்திகை தீபத்தன்று மழை பெய்தால் தேங்கி நீங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு தனியார் கல்லூரிகளின் 220 பஸ்கள் இலவசமாக இயக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரூ.10 சலுகை விலையில் 90 மினி பஸ்கள் இயக்கப்படும். கார் நிறுத்தும் இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு ஏற்கனவே 16 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீபத்தன்று மேலும் 16 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 25 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் ரூ.60 வசூலிக்கப்படலாம். அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் 90 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். கோவிலுக்குள் 7 மருத்துவ குழுக்கள், 45 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 5 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2 விருந்தினர் இல்லங்கள் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். மேலும் தேவையான உபகரணங்களுடன் கூடிய மருத்துவர் குழுவும் இருக்கும். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.