வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள், மு.க.ஸ்டாலின் அல்ல…* திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டி !
வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., த.மா.கா., பா.ம.க (அன்புமணி) உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் சார்பில் ஏற்கனவே மதுராந்தகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதுரை, புதுச்சேரியில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நாளை( மார்ச் 11) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன் நின்று செய்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆட்சி மாற்றத்திற்கான அடிகோல் விழாவாக பஞ்சப்பூரில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் அமையும். தமிழகம் முழுவதும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர் வருகிறார்கள். ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது. யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது வாக்காளர்கள் தான். ஸ்டாலின் அல்ல. 200 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்லும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் நிறுத்தி விட்டனர். தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். 28 மாதங்களாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தல் வருவதால் தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கி உள்ளார்கள். முத்ரா வீடு கட்டும் திட்டத்தில் 6 லட்சம் பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.எரிவாயு தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய், நான் ஒரு எரிவாயு டீலர் என்பதால் இதனை உறுதிப்படக் கூறுகிறேன். ஹோட்டலில் உணவு குறைப்பதற்கும், எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. நாளைய தினம் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்படும். விஜயின் கொள்கை என்னவென்று முதலில் கூறிவிட்டு அதன்பின்னர் மற்ற கட்சிகளின் கொள்கை என்ன என்பதை கேட்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.