Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன? யாருக்கு சிக்கல் ஏற்படலாம்?…

வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) – Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும். எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசியாக 2025-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

யாருக்கு சிக்கல் ஏற்படலாம்?

தமிழகத்தில் இன்று (நவ.4) எஸ்.ஐ.ஆர். திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்மூலம் யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்படலாம். நிரந்தர முகவரி அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் கூட வசிக்கவில்லையென்றால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. வாக்காளர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பின் போது பதிவு செய்கிறார்கள். பல குடும்பங்கள் வேறு ஊர்களில் நிரந்தரமாக வசித்து வந்தாலும் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்க்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்ற வழக்கமுண்டு. இந்தச் சூழலில் அவர்களால் முந்தைய முகவரியில் கணக்கெடுப்பு படிவத்தை வழங்க முடியவில்லையென்றால் அவர்கள் பெயர் அங்கிருந்து நீக்கப்படும். அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி தங்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சூழலில் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 01.07.1987-க்கு முன்பு பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். 02.12.2004-க்கு பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். இவை அனைத்துமே கணக்கெடுப்பு படிவம் சமர்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆனது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்