புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முத்துராஜா மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.