Rock Fort Times
Online News

விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான்- அவர் பக்கத்துல கூட யாரும் வர முடியாது- பிரேமலதா…!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று( ஆக. 21) நடைபெற்றது. இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர்.தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என்று கூறினார். விஜய் இவ்வாறு பேசியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தம்பி என்கிற எண்ணத்தில் பேசியிருக்கிறார். அவர் எப்போதும் எங்கள் வீட்டு பையன்தான். பல்வேறு படங்களில் கேப்டனின் சிறுவயது கேரக்டர்களை விஜய்தான் பண்ணியிருக்கிறார். விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகர் 17 படங்கள் இயக்கியிருக்கிறார். இன்றைக்கு அரசியலுக்கு வந்ததால் அண்ணன் தம்பி என்று இல்லை. கேப்டன் சினிமா துறையில் காலடி வைத்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறது. விஜய்யின் படத்துக்கு கூட கேப்டனின் ஏஐ பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். ஒரு வாரத்துக்கு முன்னாடி அனுமதி இல்லாமல் கேப்டனின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தேன். அதற்கு காரணம் கேப்டன் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அந்த மாதிரி விஜய்யும் சொல்லட்டும். இப்போது அண்ணன் என்று சொல்லியிருக்கிறார். தே.மு.தி.க. மாநாட்டுக்கு நிகர் தே.மு.தி.க. மாநாடு தான். கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே வேற யாராலும் பக்கத்துல கூட வர முடியாது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்