Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து நாளை(செப்.13) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய்..!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இவரது கட்சி, நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் விஜய். அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து நாளை (செப்டம்பர் 13) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்காக பிரத்தியேக பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திருச்சி வருகை தந்து விஜய் பேச உள்ள திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடல் பகுதியை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வழிவிடு முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்கிறார்.விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அண்ணா ஆட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆண்டுகளுடன் 2026-ஐ குறிப்பிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்