சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியலில் கால் பதித்தவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. கழகத்தை நம் வெற்றித் தலைவர் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவரின் முன்னெடுப்புகள் மிக முக்கியமானவை. ஆனாலும், நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன்மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, விஜய் அத்தனை தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாக களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் கழகத் தலைவர் தலைமையில் ‘தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வருகிற 02.02.2026 (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று விஜய் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.