Rock Fort Times
Online News

சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தை பிடித்தார், விஜய்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியினை கடந்த ஆண்டு தொடங்கினார். அவரது கட்சி முதல்முறையாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் தற்போது தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதனால் அவர் பேசக்கூடிய இடத்தை அடைய சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. தனது கொள்கை எதிரி எனவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசியல் எதிரி எனவும் காட்டமாக பேசினார். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை கடுமையாக சாடி
வருகிறார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. இதன்மூலம், விஜய் சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்தவகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். விஜய்க்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 1 கோடியே 46 லட்சம், ‘பேஸ்புக்’கில் 77 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இன்ஸ்டாகிராமில்’ 18 லட்சம், ‘பேஸ்புக்’கில் 31 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், ‘பேஸ்புக்’கில் 1.68 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம், ‘பேஸ்புக்’கில் 5.77 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 98 ஆயிரம், ‘பேஸ்புக்’கில் 11 லட்சம், ‘எக்ஸ்’ தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்