Rock Fort Times
Online News

முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட ஒரே நாளில் 5 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய்… பரபரப்பு அறிக்கை!

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியுள்ளார் விஜய். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத அவர், சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிவித்து செயல்பட்டு வருகிறார். இந்த சட்டமன்றத் தேர்தல் தான் அவருக்கு முதல் தேர்தல். எங்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தருவதாக அவர் அறிவித்தும் கூட்டணியில் யாரும் சேரவில்லை. மாறாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் மற்றும் மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சில தலைவர்கள் அவரது கட்சியில் இணைந்துள்ளனர். இந்தநிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ளார். தனது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்துள்ள அவர் நாளை அதற்கான பட்டியலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்குகிறார். அதன்படி, பெரம்பூரில்  நாளை மறுநாள் 28-ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கும் அவர் ஒரேநாளில் கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறையினரும் சில விதிமுறைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பு அறிக்கை:

இந்நிலையில் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மண்ணின் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்