Rock Fort Times
Online News

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை விஜய் கட்சி முதல் மாநில மாநாடு – பங்கேற்கும் பிரபலங்கள்…!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் திடீரென்று, தான் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், அரசியல் கட்சி தொடங்கி மக்கள் சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு  பேரிடியாக அமைந்தாலும் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நாளை 27-10- 2024( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன.  மாநாட்டுக்கு  தொண்டர்களை அழைக்கும் வகையில் தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.  மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்த மாநாட்டை விஜய் எப்படி நடத்த போகிறார், அவரது பேச்சு, கொள்கைகள், கோட்பாடுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே  பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க விஜய் கட்சியில் பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  அவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் எகிற வைத்துள்ளது.  தாமாக முன்வந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சகாயம் தரப்பிலிருந்து எந்த விதமான மறுப்பும் வெளியாகவில்லை. அதேபோல, ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்து இப்போது வெறுப்பில் இருக்கும் பழைய பிரபலங்களான வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.  நடிகர் கமல் கட்சி தொடங்கிய நிகழ்ச்சியில், பல்வேறு பொது அமைப்பினர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று, செல்வாக்குள்ள  தனிநபர்களை மாநாட்டில் மேடையேற்றி அசத்த வேண்டும் என்பது நடிகர் விஜயின் திட்டமாக இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைபவர்கள் யார் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் தான் முழு விவரம் தெரியவரும் என்று கூறுகின்றனர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்