Rock Fort Times
Online News

மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார், விஜய்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதையடுத்து முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இம்மாதம் செப்டம்பர் 13ம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்கு ‘மக்களுடன் சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்ட சுற்றுப்பயணம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் விஜய் ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முக்கிய நகரங்களில் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளார். மேலும், முக்கிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி விஜய் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விஜய்யின் சுற்றுப்பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்சை அதிநவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளனர். அந்த சொகுசு வாகனத்தை விஜய் ஆய்வு செய்துள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட மாநில மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். அனேகமாக இந்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மேற்கொள்ளும் முதல்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் முடிவடைந்ததும், கொங்கு மண்டல மாநாட்டில் தீவிர கவனம் செலுத்துவார் என்று தெரிய வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்