தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் கால் பதித்த போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் இயக்கத்தில் விஜயகாந்த் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்தும், விஜயும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அன்று முதல்
விஜயகாந்தை , விஜய் அண்ணன் என்றே அழைத்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆர்.கே.ராஜா தலைமையில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர். மேலும், விஜயகாந்த் பெயரில் அங்குள்ள சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் செய்த இந்த செயல் மற்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.