Rock Fort Times
Online News

ரொம்ப சாரிமா… தைரியமாக இருங்கள்… நடக்கக்கூடாதது நடந்து விட்டது- * உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரை தேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த 10 பவுன் நகை மாயமானது. இதுதொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர். மறுநாள் 28-ந்தேதியன்று அவரது சகோதரர் நவீன், காரை இயக்கிய ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரை திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். நகை மாயமானது பற்றி தெரியாது என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் விடுவித்து விட்டனர். அஜித்குமாரை கோவிலுக்கு பின்புறமுள்ள கோசாலை பகுதியில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் அஜித்குமாரை தடியால் சரமாரியாக அடித்தனர். விசாரணைக்குப் பிறகு அஜித்குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சிவகங்கை மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அன்று இரவு உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் பேசி, அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசாரால் அஜித்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டமும் நடத்தினர்.அஜித்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அஜித்குமாரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர். இதன்படி அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.

முன்னதாக, உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளருமான பெரியகருப்பன் சென்றார். அங்கு அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் தனது செல்போன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பி இருக்கிறார்கள் என்று கூறினார். பின்னர் தனது செல்போனை அஜித்குமார் தாயாரிடம் கொடுத்து முதல்-அமைச்சர் பேசுகிறார் என்று கூறி கொடுத்தார். அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வணக்கம்மா, ரொம்ப சாரிம்மா. (3 முறை கேட்டார்). தைரியமா இருங்கள். நான் தீவிரமான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து தர சொல்கிறேன். அமைச்சர் பார்த்துக்கொள்வார். தைரியமாக இருங்கள்… தைரியமாக இருங்கள்…நடக்க கூடாதது நடந்து விட்டது’ என்று கூறி ஆறுதல் கூறினார். பின்னர், அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவர் பேசும்போது, ‘வணக்கம் தம்பி. நடக்க கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள். நான் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ, அதை மாவட்ட அமைச்சர் மூலம் செய்ய சொல்கிறேன். தைரியமாக இருங்கள். நடந்த சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அனைவரையும் கைது செய்துவிட்டோம். தைரியமாக இருங்கள். உங்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ, அதை செய்து தர சொல்கிறேன். இதை யாராலும் (இந்த சம்பவம்) கேட்டுக்கொண்டு விட்டுவிட முடியாது. அவர்களுக்கு என்ன தண்டனை வாங்கி கொடுக்க முடியுமோ, வாங்கி கொடுத்து விடுவோம் என்றார். அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் கூறும் செல்போன் உரையாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார். அத்துடன் அவர், திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத்தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்’ என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்