மாநாட்டுக்கு அழைத்துச் சென்ற வகையில் வேன் வாடகை, சம்பளம் தராமல் மிரட்டல்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது போலீசில் புகார்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வேன், பேருந்து, கார்களில் வந்து குவிந்தனர். இந்த நிலையில் மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வந்த சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய வேன் ஓட்டுனர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று(6-11-2024) புகார் கொடுத்துள்ளனர். அதில், “தாங்கள் ஆக்டிங் ஓட்டுனர்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் தங்களை அணுகி தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து செல்ல வேன் வேண்டும் என தங்களை அழைத்தார். அதன்படி, 27-ம் தேதி தொண்டர்களை அழைத்து கொண்டு மாநாட்டிற்கு செல்லும்போதே தொண்டர்கள் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். பிறகு தொண்டர்களை அழைத்து கொண்டு மாநாட்டில் இறக்கி விட்டோம். ஆனால் தவெக நிர்வாகி மோகன் கூறியபடி சாப்பாடு எதுவும் வாங்கித்தரவில்லை. மாநாடு முடிந்து அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தோம். ஆனால், மோகன் தான் கூறியபடி வேன் வாடகை மற்றும் சம்பளம் தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் ஆட்களை வைத்து தாக்க முயன்றார். தவெகவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார். இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மோகன், சுதாகர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.