திருச்சி செம்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருச்சி, அரியலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு நாள்தோறும் ஒன்னரை லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் 44 வேன்களில் கொண்டு செல்லப்பட்டு ஆவின் பூத் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக வேன்களுக்கு தர வேண்டிய வாடகைத்தொகையை தராமல் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் கொடுத்துள்ளனர். வேன் பாக்கியை தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வேன் பாக்கியை உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தி வேன் உரிமையாளர்களும், அதன் டிரைவர்களும் இன்று(29-05-2024) அதிகாலை வேன்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுதெரியாமல் கடைகளுக்கு மற்றும் ஆவின் பூத்துகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஆவின் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். வேறு வழியின்றி தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவின் பால் நிர்வாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இன்று வாடகை பாக்கி தொகையை கொடுத்து விடுவதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
Comments are closed.