திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, பெரும்பாலான சிறப்பு சலுகைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் 2.16 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். மாலைக்குள் மொத்தம் 4.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். முன்பதிவு செய்ய டிசம்பர் 1ம் தேதி வரை வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தரிசனம் செய்யலாம். மேலும் சிறப்பு நுழைவு தரிசனங்கள் மற்றும் ரூ 300 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு டிசம்பர் 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அன்றைய https://ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியில் பதிவு செய்யலாம். திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,781 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Comments are closed.