Rock Fort Times
Online News

வைகோவுக்கு மாநிலங்களவை ‘சீட்’ மறுப்பு..!* துரை வைகோ எம்.பி. சொல்வதென்ன?

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுக சார்பாக போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று( மே 28) திமுக சார்பாக அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அக்கட்சி சார்பில் தற்போது எம்.பி., ஆக உள்ள வில்சனுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அண்மையில் கவர்னருக்கு எதிரான வழக்கில் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தொ.மு.ச. பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதியதாக எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரை வேட்பாளர்களாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இந்தசூழலில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்நிலையில் வைகோவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படாத நிலையில், இதுகுறித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல.. எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்” என்று துரை வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்