திருச்சியில் அவசரகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்- சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி…!
திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இந்த மழையினால் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிந்தபிறகு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு விட்டு விட்டு சுமார் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு தார்ச்சாலைகள் உள்வாங்கியது. பட்டாபிராமன் பிள்ளை சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், தற்போது பள்ளத்தை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்பிறகு தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக இந்த சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல வேளையாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சாலையை தரமற்ற முறையில் அமைத்தவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments are closed.