2025 யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படும் மதிப்புமிக்க போட்டித் தேர்வு யுபிஎஸ்சி தேர்வு ஆகும். இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு வெற்றி பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிகரித்து 77.08% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 87 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கடந்த 35.29% மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 54.84%ஆக அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்வை எழுதியவர்கள், https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.

Comments are closed.