முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி- த.வெ.க.தலைவர் விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி…!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்க வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் உலக மகளிர் தின நிகழ்ச்சி இன்று(08-03-2025) நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார். உலக மகளிர் தினத்தை ஒட்டி நான் சொல்கிறேன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி தான். பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி உள்ளோம். ஊடகத்துறையில் விளம்பரம் தேடுவதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசி வருகிறார். இந்த ஆட்சியை எப்படியாவது குறை கூற வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார். தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை.
ஆகையால் தான் திமுகவை சேர்ந்தவர்கள் மீது ரைடு நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தில் இருக்கக்கூடிய அனைவரும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் அனைத்து நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பது தமிழர்கள் என்று கூறியுள்ளார். இதுதான் இரு மொழிக் கொள்கையின் அர்த்தம். திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன். இதுவரை காலதாமதம் ஆனதுக்கு முக்கிய காரணம் பணி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.தற்போது அனைத்தையும் சரி செய்து விரைந்து பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மார்ச் இறுதிக்குள் திறப்பதற்கான திட்டம் உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். ஸ்ரீரங்கம் பகுதியில் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் ஹிந்தியில் பெயர் பட்டியல் வந்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,அந்த நபர் ஆன்லைன் மூலம் பதிவு செய்ததால் அதில் ஹிந்தி மொழி இடம் பெற்றுள்ளது. அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
ADVERTISEMENT…👇
Comments are closed.