திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று(27-11-2025) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டிசென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி.மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும்- சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் கமலஹாசன், கனிமொழி வாழ்த்து:
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து:- ‘தமிழ்நாடு துணை முதல் அமைச்சர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.