திருச்சி, திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் திருக்கோயில் சார்பில், வருகிற 18 ஆம் தேதி( ஐப்பசி 1) துலா ஸ்நானம் நடைபெறவுள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமமென்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. குடகு மலையிலிருந்து உற்பத்தியாகும் காவிரி நதி பூம்புகார் பகுதியில் கடலில் கலக்கிறது. குடகு முதல் பூம்புகார் வரை இப்புண்ணிய நதிக்கரையில் மூன்று இடங்களில் புகழ்வாய்ந்த புனிதநீராடும் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அதில் முதலாவது தீர்த்தக்கட்டம் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையாகும். இரண்டாவது கும்பகோணம், மூன்றாவது மயிலாடுதுறை என ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஐப்பசி முதல் நாளன்று திருச்சி திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறையிலும் காவிரியில் புனித நீராடுவது சிறப்பானது. இப்புண்ணிய காலங்களில் நீராடி அத்தலங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிபடுவோர்க்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். நிகழாண்டு துலா ஸ்நானம் ஐப்பசி 1 ஆம் தேதி (18.10.2024) வெள்ளிகிழமை காலை 6.30 முதல் 7 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை சூரியோதய காலத்தில் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர், அகண்ட காவிரியில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பார். அப்போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் “ஹரஹர மஹாதேவா” ‘ஓம் நமச்சிவாய’ என முழங்கியபடி காவிரியில் மூழ்கி ஸ்நானம் செய்வர். இதன்மூலம் உடலும், உள்ளமும் தூய்மை பெற்று பேரின்பம் பொங்க காவிரியில் நின்றவாறு, கரையில் காட்சி தரும் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். எனவே, பக்தர்கள் இந்த புண்ணிய காலத்தில் காவிரியில் நீராடி “செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை” என்று ஞானசம்பந்தரால் பாடப்பட்டவரும், ”பராய்த்துறை மேவிய ஈசனை ஏத்துமின்” என்றும் ”பொருக்கநும் வினை போயறும் காண்மினே” என்றும் திருநாவுக்கரசரால் போற்றப்பட்டவருமான ஸ்ரீதாருகாவனேஸ்வர சுவாமியை வணங்கி திருவருளை பெற்றுய்யுமாறு, திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பராய்த்துறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Comments are closed.