திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காரல் கஸ்பரோ பிரவீன். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டெரி சிந்தியா பிரிசில் (30). இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பகுதி நேர வேலை வேண்டுமா? என்ற ஒரு பக்கம் வந்தது. அது என்ன வேலை என்று ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அதில் வந்த மர்ம நபர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தனது பெயரை பதிவு செய்து கொண்ட சிந்தியா, அந்த நபர் கூறிய நிறுவனத்தில் ரூ.20,252 முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரத்து 48 வந்து சேர்ந்தது. இதனை உண்மை என்று நம்பிய சிந்தியா, கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பல்வேறு தவணைகள் மூலமாக ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்து 467 முதலீடு செய்தார். அதன் பின்னர் பல நாட்கள் கடந்தும் அவருக்கு லாபத் தொகை வரவில்லை. அவர் அனுப்பிய பணமும் திரும்ப கிடைக்கவில்லை.
பின்னர், அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிந்தியா பிரிசில் திருச்சி மாநகர கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்கு பதிவு செய்து பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.