திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 141 பயணிகளுடன் 2 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது- அதிகாரிகள், உறவினர்கள் நிம்மதி…!
திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 5-40 மணி அளவில் 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவிற்கு புறப்பட்டது. திருச்சியிலிருந்து புறப்பட்ட சில மணி துளிகளில் விமானத்தை ஓடுதள பாதையில் இயக்க பயன்படும் சக்கரத்தில் பிரச்சனை இருப்பதாக விமானிக்கு சிக்னல் கிடைத்தது. உடனடியாக விமானி இதுகுறித்து விமான துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார். சார்ஜாவில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சார்ஜாவிற்கு வர வேண்டாம் இந்தியாவிலேயே தரை இறக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்கிற விதி இருப்பதன் அடிப்படையில் இந்தியாவில் எங்கு விமானத்தை இறக்கலாம் என ஆலோசித்து அந்த விமானத்தை மீண்டும் திருச்சிக்கு வரவழைத்து திருச்சி விமான நிலையத்தில் இறக்குமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில் அவர்கள் விமானத்தை மீண்டும் திருச்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் விமானத்தில் முழுவதுமாக எரிபொருள் இருந்ததால் அந்த எரிபொருள் அளவை குறைக்க வேண்டும், முழு அளவோடு இறங்கினால் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே அந்த எரிபொருளின் அளவை குறைக்கும் வகையில் அந்த விமானம் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. இந்த பாதிப்பு குறித்து விமான நிலைய அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர், பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி உள்ளிட்டோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். தீயணைப்பு வீரர்களும் விமான நிலைய ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாத வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையம் வந்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதற்கு இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் யாரும் அச்சப்பட தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஒரு பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் தீர்ந்த பின்பு இரவு 8-15 மணி அளவில் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானத்தில் பயணித்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள் என அனைவரும் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து பயணிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் மாற்று விமானம் ஏற்பாடு செய்து அனைவரையும் மீண்டும் சார்ஜாவிற்கு அனுப்பி வைப்பதாக விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில பயணிகள் தங்களுக்கு சார்ஜா செல்ல விருப்பமில்லை என தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் நள்ளிரவு ஒரு மணி அளவில் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். திறமையாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பைலெட்டுகளை அதிகாரிகள் மற்றும் பயணிகள் வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள், கூறுகையில், எங்களுக்கு எந்த விதமான பதட்டமும் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கிய பின்பு தான் விமானத்தில் கோளாறு இருப்பதாக தெரிவித்தனர். மீண்டும் எங்களுக்கு சார்ஜா செல்ல விருப்பமில்லாததால் தற்பொழுது எங்களுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு வெளியே வந்துள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்திருந்தார்கள். எங்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்தும் தரப்பட்டது. எந்தவித அசெளகரியங்களும் எங்களுக்கு ஏற்படவில்லை என தெரிவித்தனர். மீண்டும் சார்ஜா செல்ல விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த விமானம் இரண்டு மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 107 பயணிகள் புறப்பட்டு சென்றனர். இதுபோன்ற நேரங்களில் விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் விமானங்களுக்கு “பெரி” விமானம் என பெயர் உள்ளது. இந்த விமானம் இதற்காகவே வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed.