Rock Fort Times
Online News

திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தில் 3-வது முறையாக பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு…!

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று(12-04-2024) அதிகாலை நடுரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றி பேரி கார்டு வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பின்னர், அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலிருந்து வெளியேறும் அதிக அளவு நீரோட்டத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் அகலப்படுத்தி மீண்டும் புதிய கழிவுநீர் குழாய் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அம்மா மண்டபம் வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றார். இதே பாலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 முறை பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை சரி செய்ய அன்று 3 நாட்கள் ஆனது. இதன் காரணமாக திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது மூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்