Rock Fort Times
Online News

திமுகவுக்கு பல திருப்பு முனைகளை தந்த மாவட்டம் திருச்சி… * திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

திருச்சி, திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் இல்ல திருமண விழா காட்டூரில் இன்று( ஜூலை 14) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் சிவக்குமார் – பவதாரணிக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ். எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான திருச்சி சிவா, எம். பிக்கள் துரை வைகோ, கவிஞர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள் மணமக்களை வாழ்த்தி பேசினர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திருச்சி தான் திமுக விற்கு பல திருப்புமுனைகளை தந்த மாவட்டம். திமுகவிற்கு சிறந்த முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர், சிறந்த பள்ளி கல்வி துறை அமைச்சரை தந்துள்ளது. அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது மணமகன் சிவக்குமார் அவருடைய தந்தை கே.என்.சேகரனின் பேச்சைக்கேட்க மாட்டார் என்றார். நான் தாலி எடுத்து கொடுக்கும் போது
மணமகனின் அம்மா இரண்டு முடுச்சு மட்டும் தான் போட வேண்டும் என கூறினார். ஆனால் அதை கேட்காமல் மூன்று முடுச்சுகளையும் மணமகனே போட்டுவிட்டார். பின்னர் தான் தெரிந்தது மணமகள், நீங்கள் தான் மூன்று முடுச்சுக்களையும் போட வேண்டும் என கூறியுள்ளார் என்பது. தற்போதே மனைவியின் பேச்சை கேட்க துவங்கி விட்டார். மனைவியின் பேச்சை கேட்பது தவறு கிடையாது, அதே நேரத்தில் ஒரேடியாக மனைவி பேச்சை மட்டும் கேட்காமல் அம்மா – அப்பாவின் பேச்சையும் கேட்க வேண்டும். அரசியலில் அப்பா, மகன் உறவு மிக முக்கியம். அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயர் வாங்கி விட கூடாது. அந்த பிரச்சனை எனக்கும் இருக்கிறது, மணமகனுக்கும் இருக்கிறது. திராவிட மாடல் அரசு மகளிருக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. மகளிருக்காக, மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. 22 மாதம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுப்பட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் வகையில் நாளை முதல் “உங்களுடன் ஸ்டாலின்” என்கிற முகாமை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த அரசு மக்களுக்கான அரசாக, மகளிருக்கான அரசாக, மாணவர்களுக்கான அரசாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடாக திரண்டு அடுத்த 8 மாதங்களுக்கு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று மீண்டும் திமுக வை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நூலகம் திறப்பு,

பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மண்டலம் -2, வார்டு எண் -30 காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.26.60 லட்சத்தில் கட்டப்பட்ட பிரான்சிஸ் நூலகத்தை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட கலெக்டர் சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன், மண்டலக் குழுத் தலைவர்கள் மு.மதிவாணன், ஜெயநிர்மலா, கவுன்சிலர்கள், கதீஜா, திமுக பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்